வாட்ஸ் அப்பில் பெண்களின் ஆசையை தூண்டி மோசடி..

வாட்ஸ் அப்பில் பெண்களின் ஆசையை தூண்டி மோசடி.. செய்த பட்டதாரி போலீஸில் பிடிபட்டார்.

சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரத்தை சேர்ந்தவர் இந்திரா பிரகாஷ். இவர் சில நாட்களுக்கு முன்பு புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணாவிடம் புகார் மனுவை அளித்தார். அதில் நூதன ஆன்லைன் மோசடி குறித்து விரிவாக குறிப்பிட்டிருந்தார்.

“பேஸ்புக்கில் ஆடைகள், அழகுசாதன பொருட்கள் விளம்பரங்களைப் பார்த்தேன். அதில் சில ஆடைகள் அழகான இருந்தன. விலையும் குறைவாக இருந்தது. அவற்றை வாங்க ஆசைப்பட்டேன்.

அவற்றை பதிவு செய்த ராஜேந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு சுடிதார் உள்ளிட்ட ஆடைகள் வேண்டும் என ஆர்டர் செய்தேன்.

என்னுடைய செல்போன் எண்ணை, ‘சேல்’ என்ற வாட்ஸ்அப் குரூப்பில் ராஜேந்திரன் சேர்த்தார். அந்த குரூப்பில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தனர்.

சுடிதார், சேலை போன்ற பெண்களுக்கான ஆடைகளின் புகைப்படங்களை ராஜேந்திரன் வாட்ஸ் அப்பில் பதிவு செய்தார்.

ஆடைகள் மட்டுமன்றி குறைந்த விலையில் அழகு சாதன பொருட்களும் கிடைக்கும் என்று குறுஞ்செய்தி அனுப்பினார்.

பணத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பினால் ஆடைகள், அழகு சாதன பொருட்கள் வீடு தேடி வரும் என்று ராஜேந்திரன் குறிப்பிட்டிருந்தார். அதை நம்பி நானும் 2,560 ரூபாயை ஆன் லைனில் ராஜேந்திரன் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினேன்.

ஆனால் நான் ஆர்டர் செய்த ஆடைகள் வரவே இல்லை.
ராஜேந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டபோது லைன் கிடைக்கவில்லை.

அப்போதுதான் அவர் என்னை ஏமாற்றியது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்திரா பிரகாஷ் தனது மனுவில் கோரியிருந்தார்.

சைபர் க்ரைம் போலீஸார்

இந்த புகார் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரிக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உத்தரவிட்டார்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

சைபர் க்ரைம் போலீஸார் வாடிக்கையாளர் போல களத்தில் குதித்தனர். பெண் போலீஸ் ஒருவர் ராஜேந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட ஆடைகள் வேண்டும் என்று பேசினார்
அப்போது ராஜேந்திரன், உங்களுக்கு எந்த ஆடை பிடித்துள்ளதோ அதை தேர்வு செய்து வாட்ஸ்அப்பில் புகைப்படத்தை அனுப்புங்கள்.

மறக்காமல் பணத்தை ஆன் லைனில் செலுத்துங்கள் என்று வங்கி விவரங்களை கூறினார்.

எதிர்முனையில் பேசிய பெண் போலீஸ், அவசரமாக ஆடைகள் தேவைப்படுகின்றன. நேரில் வந்து வாங்கிக் கொள்கிறோம் என்று கூறினார். உடனே ராஜேந்திரன், தாம்பரத்துக்கு வாருங்கள் என்று முகவரியை கூறினார்.

போலீஸார் மப்டியில் தாம்பரம் விரைந்தனர். அங்கு வந்த ராஜேந்திரனிடம் ஆடைகள் எங்கே என்று போலீஸார் கேட்டனர். அப்போது ராஜேந்திரன் ஆடைகளைக் கொடுக்காமல் பணத்தை வாங்குவதில் ஆர்வமாக இருந்துள்ளார்.

ராஜேந்திரனை லாவகமாக பிடித்த போலீஸார் அவரை ஒட்டேரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தங்களுக்கே உரித்தான ஸ்டைலின் விசாரித்தனர். இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீஸார் நடத்திய விசாரணையில் நூதன மோசடி அம்பலமானது.

மேற்கு தாம்பரவாசி

“மேற்கு தாம்பரம், கல்யாண்புரம், 3-வது தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் ( வயது 42) எம்.ஏ படித்துள்ளார். திருமணம் ஆகவில்லை. சில ஆண்டுகள் கால் சென்டரில் பணியாற்றியுள்ளார். இவருடன் தந்தை பார்த்தசாரதி (வயது 74) வசித்து வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் ராஜேந்திரன் வேலை இழந்து தவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் ஆன் லைனில் பணத்தை செலுத்தி அவர் ஏமாந்துள்ளார். அதே பாணியில் ஆன் லைனில் கல்லா கட்டலாம் என முடிவு செய்துள்ளார்.

ஆடைகள், அழகு சாதன பொருட்கள் மீது பெண்களுக்கு ஆசை அதிகம் என்பதால், அவர்களின் ஆசையை தூண்டி ஏமாற்ற ராஜேந்திரன் திட்டமிட்டுள்ளார்.

அதற்காக சுடிதார், சேலை போன்ற புத்தம் புதிய ஆடைகளின் புகைப்படங்களை இணையதளத்திலிருந்து இலவசமாக டவுன்லோடு செய்துள்ளார்.

அதன் உண்மையான விலையை விட பாதி விலைக்கு கொடுப்பதாக பேஸ்புக்கில் பதிவு செய்வார்.

அந்த பதிவில் மயங்கி ராஜேந்திரனை தொடர்பு கொள்பவர்களின் செல்போன் எண்களை தனது வாட்ஸ்அப் குரூப்பில் சேர்த்துவிடுவார்.

அந்தக் குரூப்பில் ஏராளமான ஆடைகள், அழகுசாதன பொருட்களின் புகைப்படங்களை விதவிதமாக பதிவு செய்தார். வெளியில் ஒரு சுடிதாரின் விலை 500 ரூபாய் என்றால் ராஜேந்திரனிடம் அதே சுடிதாரை 250 ரூபாய் என்று குறிப்பிடுவார்.

ஆர்டர்கள் குவிந்தன

விலை குறைவு என்பதால் ராஜேந்திரனுக்கு ஆர்டர்கள் குவிந்தன. ஏராளமான பெண்கள் ஆடைகளை தேர்வு செய்து அதற்குரிய பணத்தை ராஜேந்திரனின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளார்.

கடைசி வரை அவர்களின் வீடுகளுக்கு ஆடைகள் வந்து சேராது. இதன்பின் பணம் அனுப்பிய பெண்களின் செல்போன் நம்பரை வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து ராஜேந்திரன் நீக்குவார். பிறகு அந்த எண்களை முழுமையாக பிளாக் செய்துவிடுவார்.

அதனால் ராஜேந்திரனை அந்தப் பெண்களால் தொடர்பு கொள்ள முடியாது. ஒரு பெண்ணிடம் அதிகபட்சமாக ராஜேந்திரன் 2,000 ரூபாய்க்கு மேல் ஏமாற்றமாட்டார். அதனால் 2 ஆயிரம் ரூபாய்தானே என்று பெண்களும் விட்டுவிடுவார்கள்.

இதனால் ராஜேந்திரன் துணிச்சலாக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தச் சமயத்தில் இந்திரா அளித்த புகார் ராஜேந்திரனை கம்பி எண்ண வைத்துவிட்டது.

அவரைக் கைது செய்து அவரிடமிருந்து ஒரு செல்போன், 6 சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ராஜேந்திரனிடம் எத்தனை பெண்கள் ஏமாந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. தற்போது அவரின் செல்போனில் உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர்” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *