ஆம்னி பஸ்கள் எப்போது இயக்கப்படும்? என்பது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது வரை அரசு விரைவு பஸ்கள் மட்டுமே ஓடுகின்றன. ஆம்னி பஸ் சேவை தொடங்கப்படவில்லை.
ஆம்னி பஸ்களை இயக்காத 6 மாதங்களுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆம்னி பஸ்ஸுக்கும் 6 மாதங்களுக்கு ரூ.2.5 லட்சம் வரி செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்கள் மூலம் அரசுக்கு நூறு கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கும் என்பதால் ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்து வருகிறது. இதுதொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் விரிவான விளக்கம் அளித்துள்ளனர்.
“தமிழகத்தில் பஸ்கள் ஓடாத நாட்களுக்கு சாலை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் கட்டணத்தை அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.
100 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும். அரசு தரப்பில் இதுவரை பதில் அளிக்கவில்லை.
நாங்கள் தொடர்ந்த வழக்கில் வரும் 25-ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது. அதில் சாதகமாக முடிவு ஏற்பட்டால் அக்டோபர் மாதம் முதல் பஸ்களை இயக்குவது குறித்து முடிவு எடுப்போம்” என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.