பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ள தனியார் பள்ளிகள், கல்லூரிகள் கல்வி கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை முதல் தவணையாக வசூலிக்க அனுமதி வழங்கினார். இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்த 32 சிபிஎஸ்இ பள்ளிகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
“தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.