பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், “பள்ளி மாணவ, மாணவியருக்கு புத்தகம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி வரும் 14-ம் தேதி தொடங்கி வைக்கிறார். மாணவ, மாணவியருக்கு வீடு, வீடாக சென்று புத்தகங்களை விநியோகம் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்.


தொலைக்காட்சி வாயிலாக மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கப்படும். குறிப்பிட்ட நேர அட்டவணையின்படி பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். இதுதொடர்பாக விரிவான அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்று தெரிவித்தார்.

வரும் 14-ம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பள்ளி, கல்லூரிகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதுகுறித்து கல்வித் துறை வட்டாரங்கள் கூறும்போது, கொரோனா அச்சுறுத்தலால் இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை. தொலைக்காட்சி வாயிலான கல்வி திட்டம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *