இன்ஜினீயரிங் கலந்தாய்வு எப்போது என்ற அறிவிப்பை 15-ம் தேதி நானே நேரில் வந்து தெரிவிப்பேன் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பழகன்
தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரின் உடல் நலம் குறித்து சில தகவல்கள் வெளியாகின. அதனால் அமைச்சர் அன்பழகன், தான் நலமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர், தமிழகத்தில் இன்ஜினீயரிங் கவுன்சலிங் எப்போது நடத்தப்படும் என்ற தகவலையும் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக இந்தக் கல்வியாண்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன் லைன் மூலம் வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்தி வருகின்றன. பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. கல்லூரி செமஸ்டர் தேர்வு குறித்த ஆலோசனை நடந்துவருகிறது. பள்ளிக்கல்வித்துறையும் உயர்கல்வித்துறையும் மாணவர்களின் எதிர்கால நலன்கருதி பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறது.
என் உடல்நிலை பற்றி தவறான தகவல்கள் வெளியாகிவருகின்றன. நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு ரத்தஅழுத்தம், சர்க்கரை என்று எதுவும் கிடையாது. நான் தற்போது மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் ஓய்வு எடுத்துவருகிறேன்.
அமைச்சர் அன்பழகன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தாமதமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவுள்ளதால் பாடத்திட்டங்களையும் குறைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. கல்லூரி செமஸ்ட்ர் தேர்வு செப்டம்பரில் நடத்த மனிதவளத்துறை மற்றும் யுஜிசி தெரிவித்தது. செப்டம்பரில் செமஸ்ட்ர தேர்வு நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய மனித வளத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். அதே கோரிக்கையை மேற்கு வங்காள அரசும் முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இன்ஜினீயரிங் கவுன்சலிங்
இந்தநிலையில் 2020-21-ம் கல்வியாண்டு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான காலஅட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) சமீபத்தில் வெளியிட்டது. அதில் இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வை அக்டோபர் 5-ந்தேதிக்குள்ளும், 2-ம்கட்ட கலந்தாய்வை அக்டோபர் 15-ந்தேதிக்குள்ளும் நடத்தி முடிக்கவேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
இதுகுறித்து கொரோனா சிகிச்சையில் இருந்தப்படியே அலுவல்களை கவனித்து வரும் அமைச்சர் அன்பழகன் கூறுகையில், “என் உடல்நிலை பற்றி தவறான தகவல்கள் வெளியாகிவருகின்றன. நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு ரத்தஅழுத்தம், சர்க்கரை என்று எதுவும் கிடையாது. நான் தற்போது மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் ஓய்வு எடுத்துவருகிறேன்.
இன்ஜினீயரிங் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அனைத்து பணிகளும் தயார்நிலையில் உள்ளன. அதுகுறித்து வருகிற 15-ந்தேதி நேரடியாக வந்து அறிவிக்க இருக்கிறேன்” என்றார்.