அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அக். 7-ல் அறிவிப்பு

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அக். 7-ல் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்தன. அதிமுக தலைவர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.

கடந்த 2016 டிசம்பரில் அவர் உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டன. ஜெயலலிதா மறைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். கடந்த 2017 பிப்ரவரியில் அவர் பதவியை ராஜினாமா செய்தார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அரசியல் திருப்பங்கள்

இதனிடையே ஓ. பன்னீர் செல்வம் தனி அணியாகவும் சசிகலா தனி அணியாகவும் செயல்பட்டனர். சசிகலா அணியில் தற்போதைய முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.

எதிர்பாராத திருப்பமாக கடந்த 2017 பிப்ரவரியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2017 பிப்ரவரி 16-ம் தேதி தமிழக முதல்வராக பழனிசாமி பதவியேற்றார். இதன்பின் அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். தனி அணியாக செயல்பட்ட பன்னீர்செல்வம் ஆட்சியில் இணைந்து துணை முதல்வராகப் பதவியேற்றார்.

இந்த பின்னணியில் தமிழக சட்டப்பேரவையின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது.

கொரோனா பரவல் தீவிரமாக உள்ள போதிலும் பீகார் மாநிலத்துக்கு திட்டமிட்டபடி அக்டோபர் 28, நவம்பர் 3, 7-ம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது.

எனவே தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் அடுத்த ஆண்டு திட்டமிட்டபடி நடத்தப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அதை சந்திப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன.

அதிமுக செயற்குழு கூட்டம்

இந்த பின்னணியில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளர் பெயரை அறிவிக்குமாறு ஒரு தரப்பினரும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ் இடையே காரசாரமான விவாதம் நடந்துள்ளது. இறுதியில் முதல்வர் வேட்பாளர் குறித்து எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் கே.பி. முனுசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். வரும் 7-ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமியும் அறிவிப்பார்கள் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *