அமெரிக்காவின் புதிய அதிபர் யார்? என்பது நாளை தெரியவரும்.
உலக வல்லரசான அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் அந்த நாட்டு தேர்தல் மீது திரும்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். அதாவது நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையில் தேர்தல் நடைபெறும். இதன்படி, அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது.
ஆளும் குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 74) மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் (வயது 77) போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில் சென்னையை பூர்விகமாக உடைய கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
எலக்டோரல் காலேஜ் நடைமுறை
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கோ, ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு நேரடியாக வாக்களிக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள்.
அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் இருப்பார்கள். இதன்படி ஒட்டுமொத்தமாக 538 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர் அதிபர் தேர்தலில் வெற்றியடைய முடியும்.

கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு 46.1 சதவீத வாக்குகளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு 48.2 சதவீத வாக்குகளும் கிடைத்தன. ஆனால் எலக்டோரல் காலேஜ் ஓட்டெடுப்பில் ட்ரம்புக்கு 304 பேரின் ஆதரவும் ஹிலாரிக்கு 227 பேரின் ஆதரவும் கிடைத்தது. இதன்காரணமாக வாக்குகள் குறைவாக கிடைத்தபோதிலும் டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்றார்.
9 கோடி பேர் தபால் வாக்கு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த முறை தபால் ஓட்டளிக்கும் வசதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் 25 கோடியே 52 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். இதில் தபால் மூலமாக 9 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் இன்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முடிய பல நாட்கள் ஆகும். ஆனால் தேர்தல் முடிந்த அடுத்த நாள் காலையில் யார் வெற்றியாளர் என்பதை கணித்துவிட முடியும். அதன்படி அமெரிக்காவின் புதிய அதிபர் யார் என்பது நாளை தெரிந்துவிடும்.
வரும் டிசம்பர் 14-ம் தேதி எலக்டோரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் குழு தனது வாக்கினை பதிவு செய்யும். அதன் அடிப்படையில் வரும் ஜனவரி 6-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடி முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவிக்கும். அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி புதிய அதிபர், துணை அதிபர் பதவியேற்பார்கள்.