காற்றின் மூலம் கொரோனா பரவுகிறது என்ற உண்மையை ஒப்புக் கொள்ள உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ.) தயாராகி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல பரவி வருகிறது. ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் சிதறும் திவலைகள் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. வைரஸ் படிந்திருக்கும் பொருட்களை கைகளால் தொட்டு கண், வாய், மூக்கில் வைக்கும்போதும் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் காற்றின் மூலம் வைரஸ் பரவவில்லை என்று டபிள்யூ.எச்.ஓ. இதுவரை வாதிட்டு வந்தது. இதை மறுத்து அமெரிக்கா உள்பட 32 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய ஆய்வறிக்கையை டபிள்யூ.எச்.ஓ.விடம் அண்மையில் சமர்ப்பித்தனர். அதில் கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து டபிள்யூ.எச்.ஓ.வின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் டாக்டர் மரியா வான் கேர்கோவா கூறுகையில், “கொரோனா காற்றில் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் வலுவடைந்து வருகின்றன. இதுகுறித்து தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறோம். கடந்த மே மாதம் உலகம் முழுவதும் நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. தற்போது நாள்தோறும் 2 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும்” என்று தெரிவித்தார்.
“சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது டபிள்யூ.எச்.ஓ. உண்மை தகவல்களை வெளியிடவில்லை. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை. சீனாவுடன் சேர்ந்து வைரஸ் குறித்த உண்மைகளை மறைத்துவிட்டது. மேலும் கொரோனா வைரஸ் காற்றில் பரவவில்லை என்று கூறி வந்த டபிள்யூ.எச்.ஓ., இப்போது தனது நிலையில் இருந்து இறங்கி வந்திருக்கிறது. உண்மையை ஒப்புக் கொள்ள தயாராகி வருகிறது” என்று அமெரிக்க சுகாதார துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.