அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் இழுபறி

அமெரிக்க அதிபர் தேர்தலில் இழுபறி நீடிக்கிறது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் அதிபர் டொனால்டு ட்ரம்பைவிட ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இதன்படி அந்த நாட்டில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஆளும் குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் (74) மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் (77) போட்டியிடுகிறார். 

குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி சார்பில் சென்னையை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

‘எலக்டோரல் காலேஜ்’ நடைமுறை

அமெரிக்க அதிபர் தேர்தலில்  குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கோ, ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கோ மக்கள் நேரடியாக வாக்களிக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக ‘எலக்டோரல் காலேஜ்’  (வாக்காளர் குழு) உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள்.

அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளரே, அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.

கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு 46.1 சதவீத வாக்குகளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு 48.2 சதவீத வாக்குகளும் கிடைத்தன. ஆனால் வாக்காளர் குழு ஓட்டெடுப்பில் ட்ரம்புக்கு 304 பேரின் ஆதரவும் ஹிலாரிக்கு 227 பேரின் ஆதரவும் கிடைத்தது. இதன்காரணமாக வாக்குகள் குறைவாக கிடைத்தபோதிலும் டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்றார். 

தபால் வாக்கு

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் தபால் ஓட்டளிக்கும் வசதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக தபால் மூலமாக மட்டும் சுமார் 10 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் நேற்று முன்தினம் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிய பல நாட்கள் ஆகும் என்ற போதிலும் தேர்தல் முடிந்த அடுத்த நாளே யார் வெற்றியாளர் என்பதை கணித்துவிட முடியும். ஆனால் இந்த தேர்தலில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.

நேற்றிரவு நிலவரப்படி வாக்காளர் குழு உறுப்பினர் வாக்குகளில் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு 213-ம், ஜோ பைடனுக்கு 238 வாக்குகளும் கிடைத்துள்ளன. 270 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறுபவரே அதிபராக பதவியேற்க முடியும். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிபர் தேர்தலில் இழுபறி நீடிக்கிறது. சில மாகாணங்களின் முடிவுகள் வெளியாகவில்லை. அவற்றின் முடிவுகளை இரு கட்சியினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அவர் கூறும்போது, “அதிபர் தேர்தலில் நாம் வெற்றிவாகை சூட உள்ளோம். வெளிப்படையாக சொல்வதென்றால் நாம் வெற்றி அடைந்துவிட்டோம். எனினும் அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றிருக்கிறது. இப்போதே வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம்” என்று கூறியுள்ளார். அந்த பதிவு குறித்து ட்விட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இது சர்ச்சைக்குரிய பதிவு” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜோ பைடன் நம்பிக்கை

ஜனநாயக  கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் நேற்று கூறும்போது, “நாம் வெற்றிப் பாதையில் செல்கிறோம். முழுமையான முடிவுகள் தெரியவர காலதாமதம் ஏற்படலாம். எனவே அனைத்து வாக்குகளையும் எண்ணி முடிக்கும் வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டுகிறேன். நிச்சயம் நல்ல முடிவு வெளியாகும். நல்லதே நடக்கும்” என்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், வழக்கை எதிர்கொள்ள ஜனநாயக கட்சியின் சட்ட நிபுணர்கள் குழு தயார் நிலையில் இருப்பதாக ஜோ பைடனின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான நடைமுறைகளின்படி வரும் டிசம்பர் 14-ம் தேதி வாக்காளர் குழு தனது வாக்கினை  அதிகாரபூர்வமாக பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் வரும் ஜனவரி 6-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடி முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவிக்கும். அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி புதிய அதிபர், துணை அதிபர் பதவியேற்க வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் யார் வெற்றியாளர் என்பதை கணிக்க முடியவில்லை. எனினும் அடுத்த சில நாட்களில் தெளிவான முடிவு கிடைக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அந்த நாட்டு சட்ட விதிகளின்படி புதிய அதிபரை மக்கள் பிரதிநிதிகள் சபை தேர்வு செய்யும். துணை அதிபரை செனட் சபை தேர்வு செய்யும்.  

நாடாளுமன்ற தேர்தல்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று இரவு நிலவரப்படி ஜனநாயக கட்சி 189 இடங்களையும் குடியரசு கட்சி 181 இடங்களையும் கைப்பற்றியது. அவையில் பெரும்பான்மையை எட்ட 218 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு ஐனநாயக கட்சி சார்பில் 4 இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டனர். ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால், அமி பெரா, ரோ கன்னா ஆகிய அவர்கள் 4 பேரும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அமெரிக்க செனட் சபையில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 35 உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. செனட் தேர்தல் முடிவுகளில் ஆளும் குடியரசு கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெலாவேர் செனட் தொகுதியில் ஜனநாயக கட்சியின் சார்பில் திருநங்கை வேட்பாளர் சாரா மெக் பிரைட் வெற்றி பெற்றார்.  அமெரிக்க வரலாற்றில் செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல்முறையாக திருநங்கை இவர் ஆவார்.

அமெரிக்காவின் 11 மாகாண ஆளுநர்கள் தேர்தலும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை. 

உயிரிழந்த வேட்பாளர் வெற்றி

அமெரிக்காவின் ‘நார்த் டகோடா’ மக்கள் பிரதிநிதிகள் தொகுதியில் ஆளும் குடியரசு கட்சி சார்பில் டேவிட் (55) போட்டியிட்டார். கரோனா வைரஸ் தொர்றால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த அக்டோபர் 5-ம் தேதி உயிரிழந்தார்.

முன்கூட்டியே தேர்தல்  நடைமுறை தொடங்கியதால் வேட்பாளர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்க முடியவில்லை. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் 36 சதவீத வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார். இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *