பீகார் வாக்கு எண்ணிக்கை தாமதத்துக்கான காரணம் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வழக்கமாக மாலைக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துவிடும். ஆனால் இந்த தேர்தலில் நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நீடிக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த காலதாமதத்துக்கான காரணம் குறித்து பீகார் தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர்.ஸ்ரீநிவாஸ் பாட்னாவில் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார்.
“நாட்டில் முதல்முறையாக கரோனா காலகட்டத்தில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலின்போது வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை வரை வைரஸ் பரவலை தடுக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின்போது 1,500 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இதன்படி மொத்தம் 73,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்த தேர்தலில் 1,000 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற வகையில் சுமார் 1.06 லட்சம் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கேற்ப அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, 38 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த ஆண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரிக்கப்பட்டது. அனைத்து மையங்களிலும் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன.
கடந்த தேர்தலின்போது 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இப்போது 36 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதன்காரணமாகவே வாக்கு எண்ணிக்கையில் காலதாமதம் ஏற்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.