சச்சின் பைலட் காங்கிரஸுக்கு திரும்பி வந்தது ஏன்? அரசியல் பரமபதம் விளையாடிய வசுந்தரா ராஜே

கடந்த 2018 இறுதியில் ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜகவிடம் காங்கிரஸ் ஆட்சியைப் பறித்தது. அப்போதே காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது.இறுதியில் மூத்த தலைவர் அசோக் கெலாட்டுக்கு முதல்வர் பதவியும் இளம் தலைவர் சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. ஆரம்பம் முதலே இருவரும் முட்டி மோதி வந்தனர்.


கடந்த மாத தொடக்கத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தினார். அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் டெல்லி அருகேயுள்ள ஓட்டலில் முகாமிட்டனர். இதைத் தொடர்ந்து சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

ராகுல் காந்தியுடன் சச்சின் பைலட்
ராகுல் காந்தியுடன் சச்சின் பைலட்


பைலட் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் ஜோஷி தகுதி நீக்க நோட்டீஸை அனுப்பினார். இதை எதிர்த்து ராஜஸ்தான் ஐகோர்ட்டில் சச்சின் பைலட் அணி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சபாநாயகர் ஜோஷி சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றார். பின்னர் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.


ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, சச்சின் பைலட் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். இதன்பின் காங்கிரஸ் தலைமை ஓர் அறிக்கையை வெளியிட்டது.
காங்கிரஸ் மற்றும் ராஜஸ்தான் அரசின் நலனுக்காக சச்சின் பைலட் தொடர்ந்து பணியாற்றுவார்.

ஜோதிராதித்ய சிந்தியாவுடன் சச்சின் பைலட்
ஜோதிராதித்ய சிந்தியாவுடன் சச்சின் பைலட்

அவர் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய 3 பேர் குழு அமைக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
வரும் 14-ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. சச்சின் பைலட் காங்கிரஸுக்கு திரும்பி வந்திருப்பதால் ராஜஸ்தான் மாநில அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து விலகியுள்ளது.

அதிரடி திருப்பங்கள் குறித்து சச்சின் பைலட் டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, கட்சித் தலைமையிடம் எந்த பதவியையும் கோரவில்லை. பதவி மீது எனக்கு ஆசை கிடையாது. பதவிகள் வரும், போகும். என்று தெரிவித்தார்.

தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் முதல்வர் அசோக் கெலாட்.
தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் முதல்வர் அசோக் கெலாட்.


ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் நிருபர்களிடம் கூறும்போது, ” எனது கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு என் மீது அதிருப்தி ஏற்பட்டால், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது என்னுடைய பொறுப்பு” என்று தெரிவித்தார்.


காங்கிரஸின் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தார். தற்போது அங்கு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. சிந்தியாவின் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜோதிராதித்ய சிந்தியா, குவாலியர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர்.

ராஜஸ்தான் சட்டப்பேரவை வளாகம்.
ராஜஸ்தான் சட்டப்பேரவை வளாகம்.

அவரது அத்தை வசுந்தரா ராஜே ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஆவார். பாஜகவின் மூத்த தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
ஜோதிராதிய சிந்தியாவும் சச்சின் பைலட்டும் மிக நெருங்கிய நண்பர்கள். அத்தை வசுந்தரா ராஜேவுக்காக பைலட்டின் ஜோதிராதித்ய சிந்தியா பேசினார். இதன் காரணமாகவே சச்சின் பைலட் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது.


ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சியை அமைக்க வசுந்தரா திரைமறைவு செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவருக்கு முதல்வர் பதவியை வழங்க பாஜக தலைமை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற வசுந்தரா ராஜே தனது அதிருப்தியை கட்சித் தலைமையிடம் வெளிப்படுத்தினார்.

நான் முதல்வராக பதவியேற்காமல் எதற்காக காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று கருதிய வசுந்தரா, சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸுக்கு திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தானில் அரசியல் பரமபத விளையாட்டை தொடங்கிய வசுந்தரா ராஜே அவரே விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *