காதல் மனைவி தற்கொலை; பாசம், பயத்தில் தூக்கில் தொங்கிய கணவர் பண்ருட்டியில் சோகம்

பண்ருட்டியில் காதல் மனைவி தற்கொலை செய்ததும் பாசத்திலும் போலீஸ் நடவடிக்கைக்கு பயந்தும் கணவர் தூக்கில் தொங்கினார். இந்தத் தம்பதியினரின் 2 மகன்கள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

காதல் திருமணம்


கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை எஸ்.கே.வி.நகரில் குடியிருந்தவர் சிவக்குமார் (31). சிற்ப வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா (24). இருவரும் சில ஆண்டுகள் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஊரடங்கால் வேலை இல்லாமல் இருந்த சிவக்குமார், கீரை வியாபாரம் செய்து வந்தார்.


இவர் நேற்றிரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அதை சரண்யா கண்டித்துள்ளார். அதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மனமுடைந்த சரண்யா, அறைக்குள் சென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

கணவர் தற்கொலை


சரண்யாவின் அலறல் சத்தம் கேட்டு சிவக்குமார் அறைக்குள் ஓடிவந்துள்ளார். அவரைக் காப்பாற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரண்யா இறந்துவிட்டதாகக் கூறினர். அதனால் சிவக்குமார் அதிர்ச்சியில் உறைந்தார். தன்னால்தான் மனைவி உயிரிழந்தார் என கதறி அழுதுள்ளார்.


பின்னர் அவர் யாரிடமும் பேசாமல் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு மனைவி இறந்த அதே இடத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவக்குமாரைக் காணவில்லை என்று அவரின் உறவினர்கள் தேடியுள்ளனர். பின்னர் அவரின் வீட்டுக்கு ச்சென்ற பார்த்தபோது சிவக்குமார் தூக்கில் தொங்கியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பயம், பாசம்


இதுகுறித்து பண்ருட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தலைமையிலான போலீசார் சிவக்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே நேரத்தில் கணவனும் மனைவியும் இறந்ததால் இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்குப்பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவருக்கும் உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மனைவி மீதான பாசத்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களோ என்ற பயத்திலும் சிவக்குமார் தற்கொலை செய்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பண்ருட்டி போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
அம்மாவையும் அப்பாவையும் இழந்த 2 மகன்கள் ஆதரவின்றி நின்றதைப்பார்த்தவர்களின் கண்கள் கலங்கின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *