நாமக்கல்:காதல் மனைவியைக் கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய கணவர் – சிக்கியது எப்படி?

காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர், தற்கொலை என நாடகமாடியிருக்கிறார். பிரேத பரிசோதனை செய்யாமல் மனைவியின் சடலத்தை தூக்கிச் சென்றதால் கணவர் சிக்கிக் கொண்டார்.

தற்கொலை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூரைச் சேர்ந்தவர் கபிலேஷ்ராஜன். பேக்கரி நடத்தி வருகிறார். இவரின் மனைவி சர்மிளாதேவி. இவர் கடந்த 6-ம் தேதி கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக சர்மிளாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சர்மிளாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் சர்மிளாவின் கணவர் கபிலேஷ்ராஜனிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் சர்மிளா, தற்கொலை செய்யவில்லை, அவர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.

காதல் திருமணம்

தாய், தங்கையுடன் கபிலேஷ்ராஜன் பொத்தனூரில் வசித்து வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சர்மிளா தேவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு 8 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என சர்மிளாதேவி கணவரிடம் வற்புறுத்தி வந்திருக்கிறார். அதற்கு கபிலேஷ்ராஜன் சம்மதிக்கவில்லை. அதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால் கணவரைப்பிரிந்து தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் சர்மிளா. அதன்பிறகு 26.6.2021-ம் தேதி மனைவியை சமதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் கபிலேஷ்ராஜன்.

தனிக்குடித்தனம்

அதன்பிறகும் தனிக்குடித்தனம் தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆத்திரமடைந்த கபிலேஷ்ராஜன், சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் சர்மிளாவின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி அவரைக் கொலை செய்திருக்கிறார்.

பின்னர் கொலையை மறைக்க சர்மிளா தற்கொலை செய்து கொண்டதாக மற்றவர்களை நம்ப வைக்க திட்டமிட்டிருக்கிறார். இதையடுத்து சர்மிளாவின் கையை கத்தியால் அறுத்திருக்கிறார். பின்னர் பேக்கரிக்கு சென்ற கபிலேஷ்ராஜன், வீட்டுக்கு போன் செய்து சர்மிளா குறித்து விசாரித்திருக்கிறார்.

சந்தேகம்

அப்போது கபிலேஷ்ராஜனின் அம்மா, ரத்த வெள்ளத்தில் சர்மிளா கிடப்பதாக கூறியிருக்கிறார். இதையடுத்து சர்மிளாவை மருத்துவமனைக்கு கபிலேஷ்ராஜனின் குடும்பத்தினர் தூக்கிச் சென்றிருக்கின்றனர். அங்கு சர்மிளாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து மனைவியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய விடாமல் கார் மூலம் வீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார் கபிலேஷ்ராஜன். இதுதான் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. சர்மிளாவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் கபிலேஷ்ராஜன் சிக்கிக் கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்திய காதல் மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *