கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த தனியார் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளன. கல்வி கட்டணம் வசூலிப்பதையும் தனியார் பள்ளிகள் தீவிரப்படுத்தியுள்ளன.
குழந்தைகள் பள்ளிக்கே செல்லாத நிலையில் தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை வசூலிப்பது பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் கூறும்போது, “ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கல்விக்கு கட்டண தளர்வு அளிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை விரைந்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று பெற்றோரும் கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.