கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் 2 கட்ட ஊரடங்கு மட்டுமே கண்டிப்புடன் அமல் செய்யப்பட்டது. 3, 4-ம் கட்ட ஊரடங்குகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டன. ஜூலை மாதம் 2-ம் கட்ட வழிமுறைகள் வெளியிட்டன. எனினும் நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி 3-ம் கட்டமாக ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட உள்ளது. இதில் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக இடைவெளியைப் பின்பற்றி திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் சிறார், முதியோர் திரையரங்குக்கு செல்ல தடை விதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. திரையரங்குகளை திறப்பதற்கான விரிவான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது.