கொரோனா பரிசோதனைக்காக பிரசவ வலியோடு வரிசையில் நின்றபோது குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்

லக்னோ அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக பிரசவ வலியோடு வரிசையில் காத்திருந்த இளம்பெண்ணுக்கு அங்கேயே குழந்தை பிறந்தது. இந்த விவகாரத்தில் அரசு மருத்துவமனையின் அவலத்தை அனைத்து தரப்பினரும் கடுமையாக கண்டித்துள்ளனர்.


உத்தர பிரதேச தலைநகர் லக்னோவை சேர்ந்தவர் ராமன் தீட்சித். இவரது மனைவி பாலக். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த திங்கள்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை, ஆர்எம்எல்ஐஎம்எஸ் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


முதலில் கர்ப்பிணி பாலக்கிற்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்கள் வற்புறுத்தினர். அதற்கு ரூ.1,500 பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

ராமன் தீட்சித்திடம் பணம் இல்லாததால் மனைவியை கொரோனா பரிசோதனைக்காக வரிசையில் நிற்க வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றார். அங்கு பணம் திரட்டி கொண்டு மருத்துவமனைக்கு திரும்பி வந்தார்.
அதற்குள் வரிசையில் நின்று கொண்டிருந்த பாலக்கிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன்பிறகே குழந்தையையும் தாயையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையின் அவல நிலையை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


இதுகுறித்து மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஸ்ரீகேஷ் சிங் கூறுகையில், “கர்ப்பிணிக்கு நேரிட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *