மத்திய பிரதேசம் ஜாபூவா மாவட்டம், சாபர் ரன்வாசாவை சேர்ந்த திருமணமான பெண் கள்ளக் காதலில் ஈடுபட்டிருந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்துக்கு சென்றது.
பஞ்சாயத்து தலைவர்கள் அந்த பெண்ணுக்கு தண்டனையை வழங்கினர். கள்ளக்காதலில் ஈடுபட்ட குற்றத்துக்காக கணவரை தோளில் சுமந்து ஊரை சுற்றி வர வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 28-ம் தேதி கொடூர தண்டனை நிறைவேற்றப்பட்டது. சொந்த கணவரை தோளில் சுமந்து கொண்டு அந்த பெண் ஊரை சுற்றி வந்தார். அப்போது சிலர் சைக்கிள் டயர், தடியால் அந்த பெண்ணை அடிக்கின்றனர். கணவரின் சுமையை தாங்க முடியாமல் தள்ளாடி தள்ளாடி நடக்கும் பெண்ணின் பின்னால் ஒரு கும்பல் செல்கிறது. அந்த பெண்ணை ஊரே வேடிக்கை பார்க்கிறது.
இந்த அவல வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பெண்ணின் கணவர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.