திருநின்றவூர் கோயில் குளத்தில் பெண்ணின் சடலம்

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர் தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் திருநின்றவூர் பேரூராட்சியில் துப்பரவு ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்தாண்டு நாகராஜ் இறந்துவிட்டார். இவரின் மனைவி பொன்னி (50).

இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் பொன்னி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அதனால் அவரை மகனும் மகளும் தேடிவந்தனர்.

இந்தநிலையில் திருநின்றவூர் ராமர் கோயில் குளத்தில் பொன்னியின் சடலம் மிதப்பதாக அவரின் மகனும் மகளுக்கும் தகவல் கிடைத்தது. அதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், வழக்குப்பதிவு செய்து பொன்னியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொன்னியின் மரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *