சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
“நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் 6,000 குறைந்த விலை மருந்தகங்கள் செயல்படுகின்றன.
ஏழை பெண்களின் நலன் கருதி இந்த மருந்தகங்களில் ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 5 கோடி பெண்கள் பலன் அடைந்துள்ளனர்.
பெண்களின் திருமண வயதை நிர்ணயம் செய்வது தொடர்பாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்கள் மத்திய அரசிடம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும்.
பெண்கள், குழந்தைகளின் ஊட்டச் சத்து குறைபாடு குறித்தும் இந்த குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் பெண்களின் திருமண வயது 18 ஆகவும் உள்ளது.
மத்திய அரசு அமைத்துள்ள சிறப்பு குழுக்கள் பெண்களின் திருமண வயதை உயர்த்தி பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.