கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இந்தியா

கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் 3-வது இடத்திலும் உள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் வைரஸ் பரவியது.

உலகளாவிய வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் நாள்தோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

அமெரிக்காவில் இதுவரை 64.32 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.92 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

2-வது இடத்தில் இந்தியா அமெரிக்காவுக்கு அடுத்து தென்அமெரிக்க நாடான பிரேசில் 2-வது இடத்தில் இருந்தது. அந்த நாட்டில் நாள்தோறும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

பிரேசிலில் இதுவரை 41,23,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.26 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஜூலை தொடக்கத்தில் 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகளாவிய வைரஸ் பாதிப்பில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா நேற்று 2-வது இடத்துக்கு வந்தது.

கரோனா வைரஸ் புள்ளிவிவரங்களை வெளியிட்டு வரும் வேர்ல்டோமீட்டர்ஸ் இணையதளம் நேற்றிரவு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி “இந்தியாவில் 41,60,493பேர் கொரரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 71,120 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக ஒரு பெண்ணிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக ஒரு பெண்ணிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

90,632 பேருக்கு தொற்று

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 90,632 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக புதிய வைரஸ் தொற்று 80,000-க்கும் அதிகமாக பதிவாகி வந்தது.

முதல்முறையாக புதிய தொற்று நேற்று 90,000-ஐ தாண்டியுள்ளது. சர்வதேச அளவில் அதிக வைரஸ் தொற்று பதிவாகும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 31,80,865 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம் தேசிய அளவில் குணமடைவோரின் எண்ணிக்கை 77.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் தற்போது 8,62,320 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 1,065 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு சதவீதம் 1.72 சதவீதமாக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா முதலிடம்

வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை கணக்கிட்டு மத்திய சுகாதாரத் துறை பட்டியல் வெளியிட்டு வந்தது.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் சுகாதாரத் துறை பட்டியல் தயாரிக்கிறது. அந்த வகையில், தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு புதிதாக 20,800 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

இதுவரை 8,83,862 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,36,574 பேர் குணமடைந்துள்ளனர். 2,21,012 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 312 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 26,276 ஆக உயர்ந்துள்ளது.

2-வது இடத்தில் ஆந்திரா

வைரஸ் பாதிப்பில் ஆந்திரா 2-வது இடத்தில் உள்ளது. அங்கு புதிதாக 10,825 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 4,87,331 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

முதியவர் ஒருவரிடம் சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
முதியவர் ஒருவரிடம் சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

இதில் 3,82,104 பேர் குணமடைந்துள்ளனர். 1,00,880 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,347 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள கர்நாடகாவில் புதிதாக 9,746 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

அந்த மாநிலத்தில் 3,89,232 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,83,298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 99,636 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். 6,298 பேர் உயிரிழந்துள்ளனர். நான்காவது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் புதிதாக 6,777 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

அந்த மாநிலத்தில் 2,59,765 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 1,95,959 பேர் குணமடைந்துள்ளனர். 59,963 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3,843 பேர் உயிரிழந்துள்ளனர்.

5-வது இடத்தில் தமிழகம்

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் 5-வது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் நேற்று 5,783 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 4,63,480 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4,04,186 பேர் குணமடைந்துள்ளனர். 51,458 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,836 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானாவில் 32,553 பேர், அசாமில் 28,507 பேர், ஒடிசாவில் 25,909 பேர், மேற்குவங்கத்தில் 23,390 பேர், சத்தீஸ்கரில் 22,320 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் நேற்று 3,082 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 87,841 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 64,755 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22,676 பேர் சிகிச்சையில் உள்ளனர். 347 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் 19,870 பேர், பிஹாரில் 16,594 பேர், குஜராத்தில் 16,334 பேர், பஞ்சாபில் 15,870 பேர், மத்திய பிரதேசத்தில் 15,688 பேர், ஜார்க்கண்டில் 15,005 பேர், ராஜஸ்தானில் 14,996 பேர், ஹரியாணாவில் 14,911 பேர், காஷ்மீரில் 9,547 பேர், உத்தராகண்டில் 7,575 பேர், திரிபுராவில் 6,220 பேர், புதுச்சேரியில் 5,161 பேர்,

கோவாவில் 4,945 பேர், சண்டிகரில் 2,143 பேர், இமாச்சல பிரதேசத்தில் 1,978 பேர், மணிப்பூரில் 1,872 பேர், அருணாச்சல பிரதேசத்தில் 1,525 பேர், மேகாலயாவில் 1,374 பேர், லடாக்கில் 834 பேர், நாகாலாந்தில் 726 பேர், சிக்கிமில் 549 பேர், மிசோரமில் 344 பேர், அந்தமானில் 338 பேர், டையூ-டாமனில் 301 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *