உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று புல்லட் ரயில் வேகத்தில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
பிரேசில், இந்தியாவிலும் நாள்தோறும் புதிய வைரஸ் தொற்று 50 ஆயிரத்தை மிக எளிதாக தாண்டுகிறது. ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, மெக்ஸிகோவிலும் வைரஸ் தொற்று ஏறுமுகமாக உள்ளது. பெரு, சிலி, கொலம்பியா உள்ளிட்ட தென்அமெரிக்க நாடுகள் கொரோனா கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன.

அமெரிக்காவில் இதுவரை 47 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஒரு லட்சத்து 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 92 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் வைரஸ் பாதிப்பு 17 லட்சத்தை எட்டியுள்ளது. இதுவரை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் உலக சுகாதார அமைப்பு ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் நேற்று 2 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 3 லட்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, தென்ஆப்பிரிக்காவில் புதிய தொற்று கணிசமாக உயர்ந்து வருவதால் உலகளாவிய தொற்று எண்ணிக்கை 3 லட்சத்தை தொடும் அளவுக்கு சென்றுள்ளது. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகளாவிய அளவில் இதுவரை ஒரு கோடியே 78 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒரு கோடியே 11 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 6 லட்சத்து 83 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.