திருவள்ளூர் பகுதியில் லிஃப்ட் கேட்பது போல உதவி கேட்டு அதிகாலை நேரத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்தக் கும்பல் குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இரவு 12 மணிக்கு மேல்…
திருவள்ளூர், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் கந்தன்கொள்ளை பகுதியில் ஹார்டுவேஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 8-ம் தேதி இரவு 12 மணியளவில் கடைக்கு லோடு வந்துள்ளது. உடனே அதை இறக்கி வைக்க ஹரிதாஸ் கடைக்கு சென்றார். லோடுகள் இறக்கியபிறகு தனியாக பைக்கில் ஹரிதாஸ் வந்தார்.
அப்போது வேப்பம்பட்டு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனியாக இளம்பெண் நின்றுக் கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில் இளம்பெண்ணா என்று மனதில் யோசித்தப்படி அவரை ஹரிதாஸ் கடந்தார். அப்போது சார்.. ப்ளீஸ் ஹெல்ப் மீ என அந்தப் பெண் ஹரிதாஸைப் பார்த்து கையசைத்தார். அதனால் ஹரிதாஸ், பைக்கை நிறுத்தினார்.

ஹரிதாஸ்
இந்தச் சமயத்தில் அந்தப் பெண் ஹரிதாஸ் அருகே வருவதற்குள் ஆங்காங்கே மறைந்திருந்த 4 பேர் அவரை வழிமறித்தனர். அதனால் சிக்கல் எனக்கருதிய ஹரிதாஸ், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் அந்த 4 பேர் கும்பலும் இளம்பெண்ணும் ஹரிதாஸை கத்தி முனையில் மிரட்டினர். அவரின் செல்போன், 18,000 ரூபாய், ஏடிஎம்கார்டு, மோதிரம் என எல்லாவற்றையும் பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து ஹரிதாஸ் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளைக் கும்பலை தேடிவந்தனர். இந்தச் சமயத்தில் வாகனச் சோதனையில் அதிகாலை நேரத்தில் 3 பைக்கில் இளம்பெண் ஒருவர் உள்பட 5 பேர் வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோதுதான் ஹரிதாஸிடம் கொள்ளையடித்தது தெரியவந்தது.
ஒரு இளம் பெண்ணும் 4 இளைஞர்களும்
விசாரணையில், அவர்கள் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த லோகேஷ் (23), சூர்யா(20), லியோஜான் (18), பிரியா (25) எனத் தெரியவந்தது. இதில் இளைஞர் சந்தோஷ் தப்பி ஓடிவிட்டார். இந்தக் கும்பல் போளிவாக்கம் பகுதியில் பாக்கு மட்டை தயாரிக்கும் விஜயகுமார் என்பவரின் நிறுவனத்துக்குள் புகுந்து விலை உயர்ந்த செல்போன்கள், 8500 ரூபாய் மற்றும் இரண்டு பைக்குகள் ஆகியவற்றை திருடியது தெரிந்தது.
இதையடுத்து, நால்வரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 26 ஆயிரம் பணம் மற்றும் இரு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
இளம்பெண் யார்?
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “திருவள்ளூரில் இந்தக் கும்பல் பல இடங்களில் கைவரிசைக் காட்டியுள்ளது. வெள்ளவேடு பகுதியில் கிருஷ்ணகிரியிலிருந்து லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் ஊத்தங்கரையை்ச் சேர்ந்த பூவரசன் (25) என்பவரிடம் தொலைபேசி மற்றும் 2,500 ரூபாய் பணத்தையும் பறித்துச் சென்றுள்ளது.
இதேபோல் மணவாளநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போளிவாக்கம் கிராமத்தில் பாக்கு மட்டை தயாரிக்கும் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தொலைபேசி 8,500 ரூபாய் பணம் மற்றும் ஸ்பிளெண்டர், டி.வி.எஸ். ஸ்கூட்டி என இரு பைக்குகளையும் கொள்ளையடித்துள்ளது” என்றனர்.
இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிகாலை நேரத்தில் இளம்பெண், தனியாக நின்று லிஃப்ட் கேட்டால் கொஞ்சம் உஷாரா இருங்க பொதுமக்களே