திருப்பூரில் நிர்வாணகோலத்தில் இளம்பெண் சடலம் – திருமணமான ஓராண்டுக்குள் நடந்த சோகம்

காதலித்து திருமணம் செய்துகொண்ட வைஷ்ணவியின் காதல் வாழ்க்கை கசந்தது. அதனால் திருமணமான ஓராண்டுக்குள் வைஷ்ணவி கணவரைப் பிரிந்தார். சம்பவத்தன்று கணவரை நம்பிச் சென்ற வைஷ்ணவி வீட்டுக்குள் நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்தார்.

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. 19 வயதான இவர் பனியன் கம்பெனியில் வேலைப்பார்த்தார். இவருக்கும் அதே நிறுவனத்தைச் சேர்ந்த அருண்குமாருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அருண்குமார், தேனிமாவட்டம் போடியநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர். இதையடுத்து 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தக் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது.

திருமணத்துக்குப் பிறகு அருண்குமாரின் சுயரூபம் வைஷ்ணவிக்கு தெரியவந்தது. அதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து வைஷ்ணவியின் அம்மா வீட்டுக்குச் சென்ற அருண்குமார், தான் திருந்தி விட்டதாகக் கூறி வைஷ்ணவியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அருண்குமார் மட்டும் வீட்டை விட்டு வெளியில் பைக்கில் புறப்பட்டார்.

வீட்டின் கதவு நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டினர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வைஷ்ணவி நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வைஷ்ணவியின் உறவினர்களுக்கும் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.பின்னர் போலீஸார் வைஷ்ணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வைஷ்ணவியின் கழுத்தை நெரித்த தடயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டதாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அருண்குமார் தலைமறைவாக உள்ளார். அவரிடம் விசாரித்தால்தான் வைஷ்ணவியின் மரணத்துக்கான காரணம் தெரியவரும். ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *