குளிக்கும்போது வீடியோ – 6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை – சுடுகாட்டில் தங்கி சகோதரர் போராட்டம்

செங்கல்பட்டு, செய்யூரில் இளம்பெண் குளிக்கும்போது வீடியோ எடுத்து ஒரு கும்பல் 6 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரின் மரணத்துக்கு நீதி கோரி சகோதரர் சுடுகாட்டில் தங்கி போராட்டம் நடத்தி வருகிறார்.

தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த நைனார்குப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (50). இவரின் மனைவி சந்திரா (47). இந்தத் தம்பதியின் இளைய மகள் சசிகலா (26). இவர் கூடுவாஞ்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக வேலைக்குச் செல்லவில்லை. பக்கவாதம் ஏற்பட்டு கிருஷ்ணன் வீட்டிலேயே படுத்த படுக்கையாகிவிட்டார். தாய் சந்திரா கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 24-ம் தேதி சசிகலா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகள் சாவில் மர்மம்

இதுகுறித்து செய்யூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சடலத்தைக் கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப்பிறகு சசிகலாவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு இறுதி சடங்கு முடிந்து அடக்கம் செய்யப்பட்டது.
தன்னுடைய மகளின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி சந்திரா செங்கல்பட்டு எஸ்.பி அலுவலகத்தில் கடந்த 29-ம் தேதி புகாரளித்தார்.

அவள் தானாக தூக்கிட்டு இறக்கவில்லை அவளை எனது உறவினர் புருஷோத்தமன், அவரின் தம்பி தேவேந்திரன் பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது .இது சம்பந்தமாக அவர்களை விசாரிக்கலாம் என நினைத்தபோது இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

தாய் சந்திரா

தோழிகள் அதிர்ச்சி தகவல்

அந்த புகாரில் “எனது கணவர் வாத நோய் வந்து வீட்டிலேயே இருந்து வருகிறார். நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு 2 மகள்கள், ஒரு மகன். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. 2-வது மகள் சசிகலா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மகன் அருண்பாபுவுக்கு திருமணமாகவில்லை.


கடந்த 24- ம் தேதி சசிகலா தற்கொலை செய்து கொண்டதாக வேலைக்கு சென்றிருந்த எனக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். படிப்பறிவு இல்லாத நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உறவினர் உதவியுடன் காவல் நிலையத்தில் புகாரளித்தோம். எனது மகளின் தோழிகளிடம் விசாரித்தபோது, மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது.

பாலியல் வன்கொடுமை

அவள் தானாக தூக்கிட்டு இறக்கவில்லை அவளை எனது உறவினர் புருஷோத்தமன், அவரின் தம்பி தேவேந்திரன் பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது .இது சம்பந்தமாக அவர்களை விசாரிக்கலாம் என நினைத்தபோது இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

நாங்கள் வேறு ஒரு புகாரை காவல் நிலையத்தில் அளித்தோம். இதுவரை அது சம்மந்தமாக சிஎஸ்ஆர்கூட கொடுக்காமல் தாமதம் செய்து வருகின்றனர். இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நாங்கள் கொடுத்த புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

குளியல் வீடியோ


சந்திரா புகாரின் பேரில் செய்யாறு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சசிகலா குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து அவரை 6 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்கொடுமையை ஒரு கும்பல் செய்துள்ளது.

சசிகலாவுக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளது. இந்தத் தகவல் தெரிந்ததும் அந்தக் கும்பல் நீ திருமணம் செய்தால் வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டி வந்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் சந்திரா புகார் கூறிய புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுடுகாட்டில் தஞ்சம்


சகோதரியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை அவரை அடக்கம் செய்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என அருண்பாபு சுடுகாட்டிலேயே இருந்து வருகிறார்.


இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘செங்கல்பட்டு நைனார்குப்பம் சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்க வேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை திமுக இளைஞரணி வலியுறுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *