கொரோனாவுக்கு பயந்து இளைஞர் தற்கொலை? சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் சடலம் மீட்பு

சென்னை மதுரவாயல் பகுதியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞரிடம் கொரோனா பரிசோதனை செய்ய டாக்டர் கூறிய நிலையில் அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் பூட்டிய அறைக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செல்போன் சுவிட்ச் ஆப்


ஆந்திராவை சேர்ந்தவர் நிக்கில் டேவிஸ் (32), இவர் மதுரவாயல், வரலட்சுமி நகர் பிரதான சாலையில் உள்ள அறையில் தங்கியிருந்தார். அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சில நாட்களாக நிக்கில் டேவிஸ் அறை பூட்டியே கிடந்தது. அவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் என வந்ததால் உறவினர்கள் வந்து பார்த்தனர். அப்போது அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கோயம்பேடு போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் நிக்கில் டேவிஸ் இறந்து கிடந்தார்.

கொரோனா பரிசோதனை


நிக்கில் டேவிஸின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிக்கல் டேவிஸ் எப்படி இறந்தார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் தங்கியிருந்த அறையையும் போலீஸார் சோதனை நடத்தினர். எவ்வித தடயங்களும் சிக்கவில்லை.


போலீஸார் நடத்திய விசாரணையில், நிக்கில் டேவிஸிக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாக தகவல் தெரியவந்தது. அதற்காக அவர், அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கிருந்த டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மர்ம மரணம்

அதன்பின் வீட்டிற்கு வந்த நிக்கில் டேவிஸ், தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார். அதன்பிறகுதான் அவர் உயிரிழந்துள்ளார்.


அவர் எப்படி உயிரிழந்தார் என்று போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவரது சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டிருப்பதால் தடயங்களை சேகரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. காய்ச்சல் காரணமாக அவர் இறந்தாரா அல்லது கொரோனாவுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிவு கிடைத்த பிறகே தெளிவான முடிவுக்கு வர முடியும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *