டாட்டூ இளைஞர் கொலையில் நண்பர்களுடன் கைதான பெண் பியூட்டிசன்

தாம்பரத்தைச் சேர்ந்த டாட்டூ இளைஞர் கொலை வழக்கில் பெண் பியூட்டிசன் மற்றும் அவரின் நண்பர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டாட்டூ இளைஞர் கொலை

செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரின் ஒரே மகன் நிரஞ்சன் (20). இவர், பொத்தேரியில் டாட்டூ போடும் வேலை செய்து வந்தார். இவருக்கும் காட்டாங்குளத்துரைச் சேர்ந்த அமலாதேவி (25) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அமலாதேவி, தைலாவரத்தில் பியூட்டிசனாக வேலைப்பார்த்தார். அமலாதேவிக்கு திருமணமாகி 3 வயதில் மகன் உள்ளார். தற்போது கணவருடன் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அமலாதேவி வீட்டுக்கு நிரஞ்சன் செல்வதுண்டு.

இந்தச் சமயத்தில் அமலாதேவிக்கு தினேஷ் என்ற நண்பர் உள்ளார். இந்தநிலையில் அமலாதேவிக்கும் நிரஞ்சனுக்கும் மனகசப்பு ஏற்பட்டது. கடந்த 18-ம்தேதி அமலாதேவி, நிரஞ்சனுக்கு போன் செய்து வீட்டுக்குவரும்படி கூறினார்.

உடனே தாம்பரத்திலிருந்து காட்டாங்கொளத்தூருக்கு பைக்கில் நிரஞ்சன் சென்றார். அப்போது காட்டாங்கொளத்தூர் பஸ் நிலையம் பகுதியில் நிரஞ்சன் பைக்கில் சென்றபோது கார் மோதியது.

பின்னர் காரிலிருந்து இறங்கிய 5 பேர் கும்பல் நிரஞ்சனை உருட்டுக்கட்டையால் அடித்தே கொலை செய்துவிட்டு தப்பியது. இதுகுறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த 4 இளைஞர்கள், டிரைவர் உள்பட 5 பேரை போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது நிரஞ்சனைக் கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

டாட்டூ இளைஞர் மற்றும் பியூட்டிசன் அமலாதேவி
டாட்டூ இளைஞர் மற்றும் பியூட்டிசன் அமலாதேவி

பியூட்டிசன் அமலாதேவி

இதையடுத்து நிரஞ்சன் கொலை வழக்கில் மறைமலைநகரைச் சேர்ந்த சபரிநாதன் (19), தினேஷ் (31), கோகுல் (21), பாலாஜி (19), அருண் (19) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்கள் 5 பேரும் அளித்த தகவலின்பேரில் காட்டாங்கொளத்தூர் ராஜாஜி தெருவில் வசிக்கும் நிரஞ்சனின் தோழி பியூட்டிசன் அமலாதேவி(25) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் நிரஞ்சனின் தந்தை கண்ணியப்பன் கொடுத்த புகாரில், அமலாதேவிக்கும் தினேஷ் என்ற இளைருக்கும் பழக்கம் உள்ளது.

என் மகனுக்கும் (நிரஞ்சன்) அமலாதேவிக்கும் பிரச்னை ஏற்பட்டு இனிமேல் என்னுடன் பழகுவதை நிறுத்திக்கொள், வீட்டிற்கு வருவதையும்நிறுத்திக் கொள் என்று அமலாதேவி என் மகனை மிரட்டியுள்ளார்.

அதையும் மீறி வீட்டிற்கு வந்தால் நான் தினேஷிடம் கூறி உன்னை கொன்றுவிடுவேன் என்று கூறியுள்ளார். தினேஷ், அவரின் நண்பர்கள் சபரிநாதன், கோகுல், பாலாஜி அருண் ஆகியோர் காட்டங்கொளத்தூர் பஸ் நிலையம் அருகே நிரஞ்சனை வழிமறித்து அடித்து கொலை செய்துள்ளனர். என் மகனை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அமலாதேவி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும் தினேஷிக்கும் பழக்கம் இருந்தது. இந்தச் சமயத்தில் நான் வேலைப்பார்த்த அழகு நிலையத்தின் அருகில் டாட்டூ வேலைப்பார்த்த நிரஞ்சனுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் எனக்கும் பிரகதீஸிக்கும் திருமணம் நடந்தது. அந்தத் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டோம்.

அதனால் தினேஷ், நிரஞ்சன் ஆகியோர் வீட்டுக்கு வந்துச் செல்வார்கள் நிரஞ்சனின் நடவடிக்கை பிடிக்காததால் எங்களுக்குள் சண்டை வந்தது.

அதனால்தான் தினேஷ் மூலம் நிரஞ்சனை கொலை செய்தோம் என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

டாட்டூ போடும் இளைஞர் கொலையில் பியூட்டிசன் அமலாதேவி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *