சென்னை ராஜா அண்ணாமலைபுரம், அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகன் மகேஷ்வரன். 25 வயதாகும் இவர், பிசிஏ படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். கடந்த 4ம் தேதி இரவு சாப்பிட்டு விட்டு மகேஷ்வரன், தூங்கச் சென்றார். மறுநாள் காலை அவர் வீட்டில் இல்லை.
அதனால் அவரை குடும்பத்தினர் தேடினர். அதனால், பஞ்சவர்ணம், அபிராமபுரம் காவல் நிலையத்தில் 5ம் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மகேஷ்வரனைத் தேடிவந்தனர்.

இந்த நிலையில் செப்டம்பர் 7ம் தேதி பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் சிலர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியிருந்தது. அதைப்பார்த்தவர்கள் சீனிவாசபுரம் பஞ்சாயத்து தலைவர் சேகருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சேகர், பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன்பேரில் போலீஸார் இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் இளைஞர், கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரின் உடலில் ஆங்காங்கே கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இதையடுத்து கொலை வழக்காக மாற்றிய பட்டினம்பாக்கம் போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் அபிராமபுரம் காவல் நிலையத்தில் மகனைக் காணவில்லை என்று புகாரளித்த பஞ்சவர்ணம் கூறிய மகேஷ்வரனின் அடையாளங்களும் கரை ஒதுங்கிய சடலத்தின் அடையாளங்களும்ஒத்துப் போனது. உடனடியாக பஞ்சவர்ணத்துக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவர் கடற்கரையில் ஒதுங்கிய சடலத்தைப்பார்த்து விட்டு அது தன்னுடைய மகன் மகேஷ்வரன் என உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து மகேஷ்வரனைக் கொலை செய்தது யாரென்று போலீஸார் விசாரித்தபோது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கார்த்திக் என்ற இளைஞர் சரண்அடைந்தார். அவர், மகேஷ்வரனைக் கொலை செய்து கடற்கரையில் வீசியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கார்த்திக்கை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கார்த்திக்கிடம் விசாரித்தபோது மகேஷ்வரன் கொலை செய்ததற்கான காரணம் தெரியவந்தது. கார்த்திக்கும் மகேஷ்வரனும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்திருக்கின்றனர்.

வயதில் மூத்தவனாக மகேஷ்வரன் சொல்வதைத்தான் கார்த்திக், அவனின் நண்பர்கள் கேட்டிருக்கின்றனர். அது கார்த்திக்கிற்கு பிடிக்கவில்லை. மேலும் கார்த்திக், அந்த நண்பர்கள் கூட்டத்துக்கு டானாக வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். அதுதொடர்பாக கடந்த 4-ம் தேதி கடற்கரையில் மதுஅருந்தும்போல மகேஷ்வரனுக்கும் கார்த்திக்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
அதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், கத்தியால் மகேஷ்வரனை கொலை செய்து கடலில் வீசியதாக கூறினார். இந்தக் கொலையில் கார்த்திக்கை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். அவரின் நண்பர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

யார் பெரியவன் நடந்த மோதலில் இந்தக் கொலை நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.