October 25, 2026
சர்வர் மற்றும் செயற்கை நுண்ணறிவுச் செலவுகளால் இந்த ஆண்டு சம்பள உயர்வு இல்லை: ‘ஜோஹோ’ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் அறிவிப்பால் விவாதம்

சர்வர் மற்றும் செயற்கை நுண்ணறிவுச் செலவுகளால் இந்த ஆண்டு சம்பள உயர்வு இல்லை: ‘ஜோஹோ’ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் அறிவிப்பால் விவாதம்

டேட்டா சென்டர் சர்வர் விலைகள் 4 மடங்கு உயர்ந்ததாலும் செயற்கை நுண்ணறிவுச் செலவுகள் அதிகரித்ததாலும் இந்த ஆண்டு ஊழியர்களுக்கு வழக்கமான சம்பள உயர்வு வழங்க முடியாது என ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.

சென்னை, அக். 25: அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களைத் தாயகம் திரும்புமாறு அழைப்பு விடுத்த சில நாட்களிலேயே, சர்வர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு தனது நிறுவன ஊழியர்களுக்கு வழக்கமான சம்பள உயர்வு (Salary Hike) வழங்க முடியாது என ஜோஹோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 மடங்கு உயர்ந்த சர்வர் விலையும் 18 மாத ஆட்சேர்ப்பு நிறுத்தமும்

கடந்த அக்டோபர் 9-ம் தேதி எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்த ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவில் விசா நெருக்கடியைச் சந்திக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்பி இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், அக்டோபர் 12-ம் தேதி மென்பொருள் துறையின் தற்போதைய சவால்கள் குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

“மென்பொருள் துறையின் வர்த்தகச் சூழல் தற்போது நிலையற்றதாக உள்ளது. டேட்டா சென்டர்களுக்கான சர்வர் விலைகள் 4 மடங்கு உயர்ந்துவிட்டன; செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதால் செலவுகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் எங்களது விளம்பரப் பட்ஜெட்டைக் குறைத்துள்ளோம். இந்த ஆண்டு வழக்கமான ஊழியர் சம்பள உயர்வை வழங்க முடியாது எனத் தெரிவித்து, அதற்காக ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன். பெருமளவிலான ஆட்குறைப்பைத் (Mass layoffs) தவிர்க்கக் கடுமையாக உழைப்போம். கடந்த 18 மாதங்களாக நாங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை; எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.”

பெரும்பாலான ஊழியர்கள் நிறுவனத்தின் சூழலைப் புரிந்து கொண்டதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்ரீதர் வேம்புவின் இந்தப் பதிவு, உலகளாவிய மென்பொருள் மற்றும் ஐ.டி. துறையில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வரும் தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

https://x.com/svembu/status/2108422033554223537