
சென்னையில் நிறுவன வளர்ச்சிக்குப் பங்காற்றிய 12 ஊழியர்களுக்கு விலையுயர்ந்த ‘ஆடி’ சொகுசு கார்களைப் பரிசளித்த ரெஃபெக்ஸ் குழுமம்
சென்னை, அக். 25: நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தோள்கொடுத்து உழைக்கும் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ‘ரெஃபெக்ஸ் குழுமம்’ (Refex Group) தனது 12 ஊழியர்களுக்கு விலையுயர்ந்த ‘ஆடி’ (Audi) சொகுசு கார்களைப் பரிசாக வழங்கி அசத்தியுள்ளது.
‘வீல் ஆஃப் அச்சீவ்மென்ட்’ விழாவில் வழங்கப்பட்ட சொகுசு கார்கள்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருத்துவத் தொழில்நுட்ப உற்பத்தி, மருந்துப் பொருட்கள் மற்றும் பசுமைப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வரும் ரெஃபெக்ஸ் குழுமம், நிறுவனத்தின் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உடனிருந்து பணியாற்றிய ஊழியர்களைக் கௌரவிப்பதற்காக ‘வீல் ஆஃப் அச்சீவ்மென்ட்’ (Wheel of Achievement) என்ற சிறப்பு அங்கீகார விழாவை நடத்தியது.
இதில் பதவி வேறுபாடின்றி, நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்காற்றிய 12 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு, வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த 12 புதிய ஆடி சொகுசு கார்களின் சாவிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
“கடின உழைப்புக்குப் புதிய முகவரி: ஸ்டீயரிங் சக்கரத்தின் பின்னால்! நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்கள் பெருமையுடன் பயணிக்கத் தகுதியானவர்கள்.”
என்று ரெஃபெக்ஸ் குழுமம் தனது அதிகாரப்பூர்வப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஊழியர்களின் உழைப்பை வெறும் வார்த்தைகளால் மட்டுமின்றிச் செயலிலும் அங்கீகரித்த சென்னை நிறுவனத்தின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.






