October 25, 2026
ஈரோடு சத்தியமங்கலம் அருகே பட்டப்பகலில் விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த புலி: பாதுகாப்பாக வனத்திற்குள் விரட்டிய வனத்துறையினர்

ஈரோடு சத்தியமங்கலம் அருகே பட்டப்பகலில் விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த புலி: பாதுகாப்பாக வனத்திற்குள் விரட்டிய வனத்துறையினர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட புதுப்பீர்கடவு கிராமத்தில் பட்டப்பகலில் விவசாயத் தோட்டத்திற்குள் புலி புகுந்ததால் கிராம மக்கள் அலறியடித்து ஓடினர்.

ஈரோடு, அக். 25: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் பட்டப்பகலில் விவசாயத் தோட்டத்திற்குள் புலி ஒன்று புகுந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயத் தோட்டத்தில் உலா வந்த புலி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனச்சரக செம்மலை அடிவாரப் பகுதியில் புதுப்பீர்கடவு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஒன்று, மக்கள் நடமாட்டம் இருந்த பகல் நேரத்திலேயே கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டத்திற்குள் நுழைந்தது. தோட்டத்தில் புலி சாதாரணமாக நடந்து செல்வதைப் பார்த்த விவசாயிகளும் பொதுமக்களும் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

பட்டாசு வெடித்து வனத்திற்குள் விரட்டிய வனத்துறை

பாதுகாப்பான தூரத்திலிருந்து பொதுமக்கள் தங்களது செல்போன்களில் எடுத்த புலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பவானிசாகர் வனத்துறையினர், புலி பதுங்கியிருந்த பகுதியைத் தீவிரமாகக் கண்காணித்து சத்தம் எழுப்பியும் பட்டாசுகளை வெடித்தும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு புலியை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வன எல்லையில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்துப் புலியைப் பிடிக்கக் கூண்டு வைக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.