
புதுடெல்லி: பயணிகள் ரயில்களில் நிலவும் கடும் கூட்ட நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், சென்னை – டெல்லி உள்ளிட்ட நாட்டின் மிக முக்கியமான 7 பிரதான ரயில் வழித்தடங்கள் 4 வழிப்பாதைகளாக (Quadruple Tracks) விரிவுபடுத்தப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் முன்பதிவு செய்வதில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் சரக்கு ரயில் போக்குவரத்தைக் கையாளும் வகையில் இந்த தொலைநோக்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
4 வழிப்பாதைகளாக மாற்றப்படவுள்ள 7 முக்கிய வழித்தடங்கள்:
- சென்னை – டெல்லி
- டெல்லி – ஹவுரா
- சென்னை – கொல்கத்தா
- சென்னை – மும்பை
- மும்பை – டெல்லி
- மும்பை – கொல்கத்தா
- டெல்லி – கவுகாத்தி
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, கூடுதலாக 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் அதிவிரைவு ரயில்களை இயக்க முடியும் என்றும், சரக்கு போக்குவரத்தின் வேகம் பலமடங்கு உயரும் என்றும் ரயில்வே அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.






