October 22, 2026
மின் கசிவு விபத்துகளை தவிர்க்க வீடுகளில் RCCB அவசியம்

மின் கசிவு விபத்துகளை தவிர்க்க வீடுகளில் RCCB அவசியம்

பருவமழையை முன்னிட்டு தமிழக மின் வாரியம் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. வீடுகளில் மின்கசிவால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க RCCB பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, அக். 21: பருவமழையை முன்னிட்டு தமிழக மின் வாரியம் (TANGEDCO) பொதுமக்களுக்கான முக்கியப் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது:

  1. மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்பகிர்மானப் பெட்டிகள், மின்கம்பிகள் மற்றும் ஸ்டே கம்பிகளின் அருகில் செல்வதையும் அவற்றின் அருகே தேங்கியுள்ள மழைநீரில் இறங்குவதையும் தவிர்க்க வேண்டும். இத்தகைய ஆபத்துகளைக் கண்டால் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  2. தரையிலோ, சாலையிலோ அல்லது மழைநீரிலோ அறுந்து விழுந்த மின்கம்பிகளைத் தொடவோ, அப்புறப்படுத்தவோ கூடாது. உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  3. இடி, மின்னலின்போது திறந்தவெளி, தனித்த மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளின் கீழ் நிற்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடத்தில் தஞ்சமடைய வேண்டும். கட்டிடம் கிடைக்காவிட்டால் தாழ்வான இடத்தில் தஞ்சமடைய வேண்டும். திறந்த ஜன்னல்கள், கிரில்கள் அருகில் நிற்பதையும், இடியின்போது மின்சாதனங்கள் மற்றும் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
  4. தண்ணீர் கசியும் ஈரமான சுவர்கள், ஈரமான சுவிட்சுகள் மற்றும் மின்சாதனங்களைத் தொடக்கூடாது. மின்கசிவு சந்தேகம் ஏற்பட்டால், மின்சாரத்தைத் துண்டித்து, தகுதியான பணியாளர்களின் உதவியை நாட வேண்டும். குழந்தைகள் மின்சுவிட்சுகள் மற்றும் மின் உபகரணங்கள் அருகில் விளையாடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
  5. மின்கம்பிகளில் விழுந்த மரக்கிளைகளை வெட்டவோ, இழுத்து அகற்றவோ கூடாது. மரக்கிளைகள் வழியாக மின்சாரம் பாய்ந்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். அவற்றை அகற்ற மின்வாரிய அலுவலர்களை மட்டுமே அணுக வேண்டும்.
  6. மின்கம்பங்கள் மற்றும் ஸ்டே கம்பிகளில் கால்நடைகளைக் கட்டுதல், துணிகளை உலர்த்துதல், விளம்பரப் பலகைகள் அல்லது பந்தல்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
  7. வீடுகளில் மின்கசிவால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, தகுதியான மின்சாரப் பணியாளர்களின் உதவியுடன் RCCB (Residual Current Circuit Breaker) பொருத்த வேண்டும். வீட்டின் மின்வயரிங் மற்றும் பாதுகாப்புக் கருவிகளை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். RCCB மட்டும் முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்யாது; முறையான மின்காப்பும் (Insulation) அவசியம்.
  8. மின்தடை, அறுந்த மின்கம்பிகள், மின்கசிவு மற்றும் மின்சாரக் கட்டமைப்புப் பாதிப்புகள் தொடர்பான புகார்கள் மற்றும் அவசர உதவிக்கு அருகில் உள்ள மின்வாரிய அலுவலகம் அல்லது ‘மின்னகம்’ மின்நுகர்வோர் சேவை மையத்தின் 94987 94987 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *