October 23, 2026
தீ விபத்து
பஞ்சாபின் மொகாலியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பெண் மருத்துவரை தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக சமையலறைக்குள் புகுந்து தீயை அணைத்துக் காப்பாற்றிய டெலிவரி பாயின் வீடியோ வைரலாகி வருகிறது.

பஞ்சாபின் மொகாலியை சேர்ந்த பிரபல பெண் டாக்டர் ஷிவாங்கி ஜோஷி. இவர் ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு அந்த பொருளை விநியோகிக்க டெலிவரி பாய் அவரது வீட்டுக்கு சென்றார்.

வீட்டு வாசலில் டெலிவரி பாயிடம் இருந்து பொருளை டாக்டர் ஷிவாங்கி வாங்கி கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவரது வீட்டு சமையல் அறையில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

தீயின் வாசத்தை முகர்ந்த டாக்டர் ஷிவாங்கி சமையல் அறையை நோக்கி விரைந்தார். அங்கு தீ மளமளவென்று பற்றி எரிவதை பார்த்து திகைத்து நின்றார்.

நிலைமையை உணர்ந்த டெலிவரி பாய் நேராக சமையல் அறைக்கு சென்று லாவகமாக தீயை அணைத்தார். தனது உயிரை பொருட்படுத்தாமல் டெலிவரி பாய் துணிச்சலாக களத்தில் இறங்கி தீயை அணைத்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவை டாக்டர் ஷிவாங்கி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதோடு அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

“எனது சமையல் அறை தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. அதை எப்படி அணைப்பது என்று தெரியாமல் திகைத்து நின்றேன். அப்போது டெலிவரி பாய் ஓடோடி வந்து தீயை அணைத்தார். மனிதாபிமானம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் மூலம் அறிந்து கொண்டேன்.

சில நேரங்களில் நாம் உருவத் தோற்றம், பணி ஆகியவற்றை பார்த்து ஆட்களை மதிப்பிடுகிறோம். ஆனால் ஒருவரின் வீரம், மனிதாபிமானம் இக்கட்டான சூழலில் மட்டுமே தெரியவரும். மனிதர்களை மனிதர்களாக மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு டாக்டர் ஷிவாங்கி தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/reel/DerkXfLh4OL