October 23, 2026
image
சுமார் 200 அடி தொலைவில் பைக்கில் சென்றபடியே வீட்டை எட்டிப் பார்க்காமல் துல்லியமாக வீடுகளுக்கு நாளிதழ்களை வீசி எறியும் ஹரியானா பேப்பர் பாய் தீபக் சைனியின் சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹரியானாவின் ஹிண்ட் மாவட்டம், ஷபிடான் நகரை சேர்ந்தவர் தீபக் சைனி. இவர் அந்தப் பகுதியில் தினசரி நாளிதழ்களை விநியோகம் செய்து வருகிறார்.

தினமும் காலையில் மோட்டார் சைக்கிளில் வீடுகள், கடைகள்தோறும் சென்று நாளிதழ்களை வழங்கிறார். இவர் பேப்பரை டெலிவரி செய்யும் ஸ்டைல் அனைவரையும் கவர்ந்திழுத்து வருகிறது.

சுமார் 200 அடி தொலைவில் இருந்தபடியே பேப்பரை வீசுகிறார். அந்த பேப்பர் காற்றில் பறந்து எந்த வீட்டுக்கு செல்ல வேண்டுமோ, அந்த வீட்டில் சென்று விழுகிறது.

வீட்டை எட்டிப் பார்க்காமலே துல்லியமாக தீபக் பேப்பரை வீசி எறிகிறார். இவர் பேப்பரை விநியோகிக்கும் சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து தீபக் கூறும்போது:

“எனது குடும்பத்தை காப்பாற்ற 13 வயதில் இருந்து பேப்பர் பாயாக பணியாற்றி வருகிறேன். தற்போது எனது நிர்வாகத்தின் கீழ் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பேப்பர் விநியோகம் செய்யப்படுகிறது. எனது திறமையை பார்த்து சில ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கவும் அழைப்பு வந்தது. ஆனால் நான் செல்லவில்லை. எனது தொழிலை மட்டுமே நேசிக்கிறேன்”

என்றார்.