பிஹாரின் பெகுசாராய் பகுதியில் நவராத்திரி விழா மேடையில் நடன அழகியை அடித்து, பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக மிரட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாட்னா / பெகுசாராய், அக். 21: பிஹாரின் பெகுசாராய் (Begusarai) பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நடன அழகிகள் மேடையில் நடனம் ஆடிக் கொண்டு இருந்தனர். அப்போது உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேடையேறி நடன அழகி ஒருவரை அடித்தார். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தனது கைத்துப்பாக்கியை எடுத்து பொதுமக்களை சுட்டு விடுவதாக இன்ஸ்பெக்டர் மிரட்டினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பிஹார் காவல் துறை சார்பில் உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
