
சென்னை, அக். 22: நாடு முழுவதும் பணியில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்காகக் கடந்த ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் சிறப்பு டெட் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 2.15 லட்சம் ஆசிரியர்கள் எழுதினர். இதில் 1.10 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை.
தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் டிசம்பர் மாதத்தில் மீண்டும் சிறப்பு டெட் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆசிரியர்கள் இத்தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில், பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு வார இறுதி நாட்களில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) அறிவித்துள்ளது.






