
சென்னை, அக். 22: செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே அதிகரித்து வரும் ரயில் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு, 4-வது ரயில் பாதை அமைக்கத் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இரு ரயில் நிலையங்களுக்கும் இடையே உள்ள தொலைவு 21.5 கி.மீ. ஆகும். இந்த தடத்தில் ரூ.273 கோடி மதிப்பீட்டில் புதிய நான்காவது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) அண்மையில் வெளியிடப்பட்டது.
விரைவில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். பணிகள் தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள் புதிய ரயில் பாதையை அமைத்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில்கள் செல்லும் வகையில் இந்த ரயில் தண்டவாளம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் மற்றும் சென்னை புறநகர் மின்சார ரயில்களின் சேவை கணிசமாக மேம்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






